சனி, 15 ஜூன், 2013

சேலம் இருட்டுக்கல் முனியப்பன்


சேலம் இருட்டுக்கல் முனியப்பன் - கோ.ஜெயக்குமார்.

பகைவர்களை ஒழிப்பதாக கூறி கோழிகளை தூக்கிலிடும் அநியாயம் !...
கூழாங்கற்களை உருட்டி ஜோடி பார்த்து குறி சொல்லும் விநோதம் !...
குழந்தை பாக்கியம் வேண்டி கண்ணீருடன் நிற்கும் பெண்களின் பரிதாபம் !...
===========
ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற நாடாக இந்தியா இருந்தாலும், அதில் அதிக ஈடுபாடு கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், இங்கு பல பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றி மூடநம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்டிருந்தாலும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் இன்னுமும் கடவுளின் பெயரில் பல விபரீத நம்பிக்கைகளை கொண்டுள்ளார்கள் என்பதுதான் வேதனை. அன்பை போதிக்கும் மதத்தை, மாந்திரீக வித்தைகளுக்கு பயன்படுத்தி எதிரிகளை பழித் தீர்க்க குறியாக இருக்கும் சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
பில்லி சூன்யம், ஏவல் போன்ற தாந்திரீக முறைகளை வைத்துதான் பகைவர்களை ஒழிக்க போவதாக பயமுறுத்தவார்கள். இதேபோல்தான், சேர்வராயன்மலையில் உள்ள ஒரு சாமியார், முட்டைகளில் பெயர் எழுதி மந்திரம் போடுதல், காசுகளை துண்டாக்கி போடுதல், கோழியை தூக்கில் போட்டு துடிதுடிக்க கொன்று நேர்த்தி கடனை செய்யும் பல விநோத செயல்களால் அப்பகுதி மக்களை கதிகலங்க வைக்கிறார். அந்த சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
சேலம் மாவட்டம் வளையகாரனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டதுதான் கற்பகம் என்கிற கிராமம். இந்த ஊரின் எல்லையாக சேர்வராயன்மலையும், அதையொட்டி உள்ள மூக்கனேரி பறவைகள் சரணாலயத்திற்கு இடையே அமைதுள்ளதுதான் இருட்டுக்கல் முனியப்பன் கோயில். அதை சுற்றியுள்ள ஊரின் காவல் தெய்வமாக விளங்குகிறார், மலையின் கீழே இருக்கும் இருட்டுக்கல் முனியப்பன்.
இந்த கோயில் வளாகத்தில் விநாயகர், சிவன், சக்தி, கிருஷ்ணன், முருகன் போன்ற கடவுள் சிலைகள் இருந்தாலும், இருட்டுக்கல் முனியப்பன் சாமி மட்டும் தலைப்பாகை, முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில் பயங்கரமான உருவத்தில் காட்சி அளிக்கிறார்.
வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுகிழமைகளில் பல ஊர்களிலிருந்த பக்தர்கள் குவிகின்றனர். இதனால், அன்று கோயில் கலைக்கட்டி இருக்கும். இருட்டுக்கல் முனியப்பனை தரிசிக்க சாதாரண மக்கள் முதல், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அமைச்சர்கள் என பலதரப்பட்டவர்களும் இந்த கோயிலுக்கு வந்து செல்வதுதான் வியப்பை அளிக்கிறது.
அப்படி என்ன இந்த கோயிலின் விஷேசம் என்று ஆராய்ந்தால், அந்த கோயிலை சுற்றி நிறைந்திருந்த விநோத காட்சிகள் விடையாக அமைகின்றன.
கற்பகம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் இந்த கோயிலின் பூசாரியாக உள்ளார். ஏழுமலைக்கு, சின்னக்கண்ணு என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழுமலை ஒருவேளை உணவிற்கே மிகவும் திண்டாடி வந்தார். அப்போது ஒரு நாள் கனவில் தோன்றிய இருட்டுக்கல் முனியப்பன் தன்னை தினமும் தரிசித்து வருமாறு கூறியதாகவும், அன்று முதல் கடந்த 42 ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு பூசை செய்து வருவதாக கூறப்படுகிறது.
காலையில் கோயிலுக்கு வரும் பூசாரி ஏழுமலை வந்ததும் காவல் தெய்வம் இருட்டுக்கல் முனியப்பன் சிலை உள்பட அனைத்து சிலைகளையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மாலைகளை அணிவிப்பார். அதன்பின்னர், ரூபாய் நோட்டு மாலையை மட்டும் முனியைப்பனுக்கு சாத்தப்படுகிறது.
பூசாரி ஏழுமலை தனது உதவி ஆட்களுடன் ஒவ்வொரு சாமிக்கும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துகொண்டே வருவார். அப்போது பெருமாள் சிலை அருகே சென்று தீபாரதனை செய்து விட்டு, பாடல்களைப் பாடத்தொடங்கியதும் உச்சி வானில் கருட தரிசனம் கிடைக்கும். இதை ஒரு நல்ல சகுனமாக கருதி பக்தர்கள் வழிபடுவார்கள்.
அதன்பின்னர், முனியப்பன் சாமி சிலை அருகே வரும் பூசாரி பக்தர்களுக்கு பேய் ஓட்டுதல், கல் போட்டு பார்த்து குறி சொல்லுதல், முட்டையில் பெயர் எழுதி வைத்து எதிராளிகளை அழிப்பதாக பூசை செய்வது, கோழிகளை துடிக்க துடிக்க தூக்கில் போட்டு பரிகாரம் செய்வது, குழந்தை இல்லாமல் கண்ணீருடன் இருக்கும் பெண்களுக்கு பரிகாரம் தருவது போன்ற உப தொழில்களை கற்று, பக்தர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்மையில் யார் தெரியுமா, சொத்து தகறாறு காரணமாக அண்ணன் தம்பியை ஒழிப்பது, அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக எதிரியை முடக்குவது, தொழில் தொடர்பான எதிரியை கூண்டோடு அழிப்பது, மனைவியின் கள்ளக்காதலனை நிர்மூலமாக்குவது போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தான் இந்த ஏழுமலை பூசாரி தனக்கு சாதகமான பக்தர்களை உருவாக்கிக்கொள்கிறார்.
இங்குவரும் பெரும்பாலான பக்தர்கள் எதிரியின் கொட்டத்தை அடக்க முட்டை ஓதி வைக்கத்தான் வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
இந்த சித்து விளையாட்டு முனியப்பன் எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு நடக்கிறது. ஆனால், பக்தர்களோ கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்கவும், அடியோடு அழிக்கவும் ஒரு கோழி முட்டை போதும் என்கின்றனர்.
இதனால், சுற்றி வட்டார பகுதியில் திருட்டு போன்ற குற்ற செயல்கள் நடப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சித்து விளையாட்டு இதோடு நிற்கவில்லை. அடுத்ததாக கோழியை தூக்கில் தொங்கவிட்டு துடிக்க துடிக்க இருட்டுக்கல் முனியப்பனுக்கு பலி கொடுக்கும் சம்பவம் அனைவரையும் அதிரவைக்கிறது. ஏனென்றால், கோழியை தூக்கிலிட்டு கொல்லும் போது தனக்கு அநியாயம் செய்ய நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவதாக நம்பப்படுகிறது.
இதற்காகவே, கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில் இறந்துப்போன கோழிகள் அநியாயமாக தொங்கிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.  அந்த கோழி வெய்யிலில் காய்ந்த உதிர்வதைப் போல எதிரியும் உதிர்ந்து விடுவான் என்று பக்தர்கள் நம்பிக்கையாக சொல்லுகிறாகள். இப்படி நினைத்து வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடுதாகவும், அதிகபட்சம் 3 மாதத்திற்குள் நிறைவேறி விடுவதாக உறுதியாக பக்தர்கள் நம்புகின்றனர்.
உண்மையிலேயே அங்கு நடக்கும் பூசைகள், பரிகாரங்கள், வழிபாடுகள் வெளிப் படையாகவே செய்யப்படுவதாகவும், இருட்டுக்கல் முனியப்பனுக்கு உள்ள சக்திதான் இதெற்கெல்லாம் காரணம் என்று அங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த சித்துவிளையாட்டுகளை தவிர, அடுத்ததாக ஒரு ஜகதால காரியத்தையும் இங்கு அரங்கேற்றுகிறார் ஏழுமலை பூசாரி. அதுதான் பேய் ஓட்டும் விநோத நிகழ்ச்சி. பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்கள் முனியப்பன் சிலை அருகே சாமியாடும்போது, உனக்கு பிடித்ததை கேள் என்று பிரம்பை எடுத்து அடிக்கிறார் இந்த ஏழுமலை பூசாரி.
சில பெண்கள் உண்பதற்கு கறிசோறும், குடிப்பதற்கு சாராயமும், பீடி சுருட்டு என கேட்ட வாங்கி பிடித்துவிட்டு பின்னர் மலையேறுவதாக கூறி உச்சி முடியை எடுத்து பேய்களை விரட்டிவிடுவதாக கூறப்படுகிறது.
இதோடு இந்த ஏழுமலை பூசாரியின் விளையாட்டு நின்றதா என்றால் அதுதான் இல்லை. அடுத்ததாக கைவசம் ஒரு வித்தையை வைத்துள்ளார். எல்லா ஆர்ப்பாட்டமும் நடத்தி கறியும் சோறும் தின்ற பிறகு, ஹாயாக உட்கார்ந்து இந்த வித்தையை ஆரம்பிப்பார். அது என்ன விளையாட்டு என்பதை இப்போது பார்ப்போம்.
கூழாங்கற்களை தரையில் உருட்டிபோட்டு அது ஜோடி சேர்ந்த விதத்தை பார்த்து, நடந்ததையும், நடக்கப்போவதையும் கணித்துவிடுவதாக சொல்லும் இந்த பூசாரி, ஒரு பிடி கூழாங்கற்களை தரையில் உருட்டுகிறார். அப்போது அதனை இரண்டு இரண்டாக பிரித்துப் பார்க்கின்ற போது இரண்டாக வந்தால் உடனே, நினைத்தது நடக்கும் என்றும், ஒற்றைப் படையாக வந்தால் காரியம் காலதாமதமாக நடைபெறும் என்று பக்தர்களிடம் கூறி பூசாரி ஏழுமலை ஒரு சொற்ப பணத்தை கறந்துவிடுகிறார்.
இப்படித்தான், நிலப்பிரச்சனை தகறாறு ஒன்றில் பெண்களிடம் துடைப்பத்தாலும், முறத்தாலும் அடி வாங்கி அவமானப்பட்டு மனம் உடைந்துப்போன சுப்பிரமணி என்ற நபர், இந்த இருட்டுக்கல் முனியப்பன் கோவிலுக்கு வந்து, தான் பாதித்தது போல அந்த பெண்களும் பாதிப்பு அடையவேண்டு என்று வேண்டிக்கொண்டார்.
பூசாரி ஏழுமலை இதோடு அடிங்கினாரா என்றால் அதுதான் இல்லை பெண்கள் விஷயத்திலும் மூக்கை நுழைத்து ஒரு ஹீரோ போலவே வலம் வருகிறார். அதாவது, குழந்தை வரம் வேண்டிவரும் பெண்கள் பிரச்சனைகளை சொல்லிமாளாது. இப்படிப்பட்ட  பெண்களுக்கு அவர் செய்யும் நிவாரணம் என்ன தெரியுமா,
குழந்தை வரம் வேண்டி மடியை ஏந்தி நிற்கும் பெண்களுக்கு படையல் சோற்றை காணிக்கையாக போடுவதுதான். இந்த காட்சி காண்பவர்களுக்கு நிச்சயம் கண்களில் கண்ணீர் துளிகள் வரவழைக்கும்.
படையல் சோறு உண்டபின் குழந்தை பேறு கிடைத்துவிட்டால் ஆண்குழந்தை என்றால் ஆண் உருவம் பெண் குழந்தை என்றால் பெண் உருவம் என்றும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் வேலைக்கு ஏற்ற உருவம், திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற்றவுடன் திருமண கோலத்தில் சிலை என கோயிலை சுற்றி ஏராளமான சிலைகள் நேர்த்தி கடனாக வைப்பதே முனியப்பனின் சக்திக்கு சான்று என்கிறார் சாமியார் ஏழுமலை பூசாரி.
இப்படிப்பட்ட வேண்டுதல்களை நிவர்த்தி செய்து கொடுத்த இருட்டுக்கல் முனியப்பனுக்கு, பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு படையல் இட்டு மகிழ்வதுதான் வாடிக்கையாக உள்ளது.
ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாமல் இருந்த பூசாரி ஏழுமலை, இருட்டுக்கல் முனியப்பன் பேரில் கோவிலில் வசூலாகும் பணத்தையும், பொருட்களையும் வைத்துக்கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால், இதையும்  சில சமுக விரோத கும்பல் பூசாரி ஏழுமலையையும் அவரது பக்தர்களையும் மிரட்டி பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மர்ம கும்பலுக்கு ஈடுகொடுக்க முடியாத பூசாரி ஏழுமலை, காவல்துறையின் உதவியை நாடியதால், தற்பொழுது போலீஸ் பாதுகாப்போடு இருட்டுக்கல் முனியப்பனுக்கு பூசைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அநியாத்தையும், அக்கிரமத்தையும் அழித்து காவல் தெய்வமாக விளங்கும் இந்த இருட்டுக்கல் முனியப்பன் சாமிக்கு தன்னை சுற்றி நடக்கும் சமூக விரோத செயலுக்கு முடிவு கட்டமாட்டாரா என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்க்கையில் ஒழுக்கம், பக்தி, நேர்மை மிக முக்கியமானவை. அதே சமயத்தில் பக்தி என்ற போர்வையில் நடக்கும் பல தில்லாலங்கடி செயல்களுக்கு அடிமையாகி அமைதியை இழக்காமல், அறிவு பூர்வமாக யோசித்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதுதான் நல்லது. அதைவிட்டு, மூடத்தனமாக மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எலுமிச்சம் பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால் எதிரிகளை பழிவாங்கிவிடலாம் என்று நம்புவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.
=========
பேட்டிகள்
1 சுப்பிரமணியன் -ஓமலூர் பொதுமக்கள்
2 ஏழுமலை - இருட்டுக்கள் முனியப்பன் பூசாரி
3 சபரி - துப்பரவு செய்யும் சிறுவன்
4 தீபா - வீராணம்
5 டாக்டர் - பச்சையப்பன் பொதுமக்கள்  கற்பகம்
6 பாலன் - பாறைப்பட்டி
7 ஜெயந்தி  - ராமநாதபுரம்
8 சிவலிங்கம் - அம்மாபேட்டை
9 மஞ்சுளா - ஈரோடு
10 ராதாகிருஷ்ணன் – வீராணம்

இப்படி அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க, இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில் நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.  அது எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு. அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க.
இதுமாதிரி நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக