வியாழன், 27 ஜூன், 2013

கண்ணதாசன் நினைவலைகள்

கண்ணதாசன் நினைவலைகள்
தமிழ் திரையுலகில் 5 ஆயிரத்துக்கும் மேல் பாடல்கள் எழுதி தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள மாபெரும் கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், ஆன்மீகம், சோகம், பிரிவு, கோபம், விரக்தி என அத்தனை மனித உணர்வுகளையும் உயிர்ப்பாக பாடல்களில் வடித்து இல்லந்தோறும் வாழ்ந்தார்.

பாடல்கள் எளிய நடையில் இருந்ததால் படிக்காத பாமரர்களையும் கட்டி இழுத்தன. `ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி' என ராகத்தின் மகிமையை உணர்த்தினார். `சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்தல்லவோ மனித ஜாதி' என மானிட பிறப்பின் சூட்சுமம் உரைத்தார்.

`பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா' `சட்டி சுட்டதடா கைவிட்டதடா', `போனால் போகட்டும் போடா' என்று தத்துவங்களை உதிர்த்தார்.

`சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி' என வாழ்வின் வலியை பதிவு செய்தார். `வீடு வரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ' என உறவு நிலைகளை பதிவு செய்தார்.

`அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே' மற்றும் `அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்', `வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா' என வார்த்தைகளை வைத்து விளையாடினார்.

`காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்' பாட்டில் இயற்கையோடு பெண்ணை வர்ணித்தார். `ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர்துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு' என்ற பாட்டில் தான் யார் என்று பிரகடனம் செய்தார்.

அந்த பாட்டிலேயே `நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை' என்றார். `உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' பாட்டு இப்போதும் இதயத்தை பிழிந்து போடுகிறது. `பசுமை நிறைந்த நினைவுகளே பாடி திரிந்த பறவைகளே' என மாணவ பருவ வாழ்வை பட்டியலிட்டார்.

கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை டி.எம்.சவுந்தரராஜனின் குரல், எம்.ஜி.ஆர், சிவாஜியின் நடிப்பு மேலும் உயிர் ஊட்டின. `வாராய் என் தொழி வாராயோ', `மலர்ந்தும் மலராத பாதி மலர்போல', `ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது', `எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்று ஆயிரக்கணக்கான ஜீவனுள்ள பாடல்களை தந்து தமிழர்கள் வாழ்வோடு நிக்கமற நிறைந்துள்ளார்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் இந்துக்களின் பொக்கிஷம். இன்னும் நூற்றுக்கணக்கான சிறு கதைகள், நாவல்கள், ஆன்மிக புத்தகங்கள் எழுதியுள்ளார். படத்தின் கதையை பாட்டுக்குள் கொண்டு வருவதில் கண்ணதாசனுக்கு நிகர் எவரும் இல்லை.

சிறந்த பேச்சளர், எழுத்தாளர், ஆன்மீகவாதி. அரசியலிலும் சில காலம் இருந்து விட்டு வந்தார். கண்ணதாசனின் ஆரம்ப காலங்கள் கடவுள் இல்லை என்ற திராவிட இயக்க கொள்கைகளில் நகர்ந்தது. பிறகு அதில் இருந்து விலகிமுழு ஆன்மிகவாதியானார். இன்று கண்ணதாசன் 87-வது பிறந்த நாள்... நெஞ்சிருக்கும் வரைக்கும் அவர் நினைவிக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக